விவசாயப் போதனாசிரியர் சிவதாஸ் மறைவு: இயற்கை விவசாயத்துறைக்கு பேரிழப்பு!!
இயற்கை விவசாயத்தை உற்சாகத்துடனும் எளிமையாகவும் கற்றுக் கொடுக்கும் விவசாயப் போதனாசிரியர் சூரியகுமாரன் சிவதாஸ் (மாவடியூர்) அவர்கள் இன்று புதன்கிழமை 07.09.2022 காலை வவுனியாவில் சிறுநீரக செயலிழப்பினால் காலமானார் .
யாழ் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வவுனியா ஈச்சங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரான இவர்
தற்போது வவுனியா விவசாயத் திணைக்களத்தின் முருகனூர் பண்ணை முகாமையாளராக பணியாற்றி வந்திருந்தார்.
பல்வேறு நகைச்சுவைகளுடன் இயற்கை விவசாய தகவல்களை சுவாரஷ்யமான முறையில் கூறும் ஆற்றல் பெற்ற இவரின் இழப்பு உண்மையில் இயற்கை ஆர்வலர்களுக்கு, இயற்கை விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.
ஏர்முனை என்கிற இயற்கை விவசாயம் சார் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து எளிமையான முறையில் விவசாயிகளுக்கும் புரியக்கூடிய இலகுதமிழில் பல்வேறு கட்டுரைகள், பதிவுகளை எழுதி வந்தார்.
இவரது சிந்தனையில் ஓவியக் கலைஞர் சங்கருடன் இணைந்து இவர் வெளிக்கொண்டு வந்த கருத்தோவியங்கள் விவசாயிகள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மன்னாரின் பெரியமடுவில் தான் விவசாயப் போதனாசிரியராக இருந்த காலத்தில் பண்ணைப் பெண்கள் அமைப்பு சிறப்பாக இயங்க வழிகாட்டினார். இயற்கை வழி இயக்கத்தோடும் இணைந்து இயங்கியவர்.