நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர் கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் சம்பியனானது!! (வீடியோ, படங்கள்)
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 156ஆவது பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.
156ஆவது ஆண்டைப் பூர்த்தியை முன்னிட்டு பொலிஸ் திணைக்களமானது 2022.09.03 தொடக்கம் 2022.09.10 ஆம் திகதி வரை தேசிய பொலிஸ் வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பொலிஸ் வாரத்தினைச் சிறப்பிக்கும் வகையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு
விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கல்முனை தலைமையக பொலிஸ் எல்லைக்குட்பட் அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டி கல்முனை உவெஸ்லி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுத் தொடரில் 12 அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டு இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர் அணி மற்றும் சாய்ந்தமருது பிளாஸ்டர் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இதில் சாய்ந்தமருது பிளாஸ்டர் அணி சிறப்பான முறையில் அபாரமாக விளையாடி 156ஆவது பொலிஸ் தின வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது பிளாஸ்டர் கழக அணித் தலைவர் தனது அணியை முதலில் துடுப்பாட்டத்திற்கு பணித்திருந்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 05 ஓவர்களில் 80 ஓட்டங்களை எதிர்அணியினருக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர் கழக வீரர்கள் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் சாய்ந்தமருது பிளாஸ்டர் கழக அணி 36 ஓட்டங்களினால் தங்களுடைய வெற்றியினை பதிவு செய்தனர்.
இச்சுற்றுத் தொடரினுடைய சிறந்த துடுப்பாட்ட வீரராக சாய்ந்தமருது பிளாஸ்டர் கழக அணியை சேர்ந்த நஜாத் தெரிவு செய்யப்பட்டதோடு சுற்றுத் தொடரினுடைய சிறந்த வீரராக சாய்ந்தமருது பிளாஸ்டர் கழக அணி வீரர் அஸ்ஹான் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு இச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இரு அணி வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக பிரதம அதிதியாக பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் ,கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் , கல்முனை பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக், கல்முனை உவெஸ்லி தேசிய பாடசாலை எஸ்.கலையரசன் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”