இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள்- காங்கிரசுக்கு பரிந்துரைக்கும் பாஜக..!!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் எந்த பலனும் இல்லை. தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுபட்டுள்ளது. இதனால் (இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்கும் வகையில்) இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை குடும்பத்தைக் காப்பாற்றும் பிரச்சாரம் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது குடும்பம் மற்றும் கட்சியின் நிலை ஆட்டம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்குள் புகுந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது ஆதாரங்களை கேட்டு, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்திய ராகுல்காந்தி, தற்போது நாட்டை ஒற்றுமைப் படுத்த பயணம் தொடங்குவது எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.