ஜோன்ஸ்டனுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், இன்று (08) அதி குற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி அதி குற்றப்பத்திரம் பகிரப்பட்ட நிலையில், குறித்த மூவருக்கும் எதிராக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இன்று (08) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகள் மூவரையும் 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக ஒக்டோபர் 21ஆம் திகதியை நிர்ணயித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டனின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு நீதிபதி முன்னிலையில் அதி குற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச சட்டத்தின் கீழ் மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.