;
Athirady Tamil News

கேரளாவில் இன்று திரு ஓணம் கோலாகல கொண்டாட்டம்: விருந்து படைத்து மக்கள் மகிழ்ந்தனர்..!!

0

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் கொண்டாடும் திருவிழா ஓணம். முன் காலத்தில் கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த போது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் 3 அடி நிலம் கேட்ட திருமாலுக்கு தனது தலையை 3-வது அடியாக வழங்கிய மகாபலி, பாதாள உலகம் சென்றார். அப்போது அவர் தான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும் என இறைவன் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமாலும் அனுமதித்தார்.

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி மன்னர் நகர்வலம் வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மன்னருக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள், வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு, அறுசுவை விருந்து படைத்து வருகிறார்கள். கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பெயரளவிற்கே கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது.

அது முதல் கேரள மாநிலம் விழாக் கோலம் பூண்டது. திருவோண திருநாளான இன்று கேரளா முழுவதும் திரு ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர். வீடுகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றிலும் அத்தப்பூ கோலம் அழகாக போடப்பட்டு இருந்தது. கேரளா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மலையாள மக்களும் அத்தப்பூ கோலம் போட்டு புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமான ஓண சத்யா (அறுசுவை விருந்து) அனைத்து வீடுகளிலும் படைக்கப்பட்டது. வாழைக்காய் துவரன், அவியல், சேனை எரிசேரி ஓலன், புளி இஞ்சி, பீட்ரூட், பச்சடி, மாங்காய் பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, பருப்பு சாம்பார், புளிசேரி ரசம், மோர், அடை பிரதன், பாயாசம் என 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து மக்கள் மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக புலிக்களி (புலி நடனம்), படகுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் கேரளாவில் இன்று நடத்தப்பட்டன. இதில் சிறுவர்-சிறுமிகள், முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்றனர்.

மேலும் வீடுகளில் ஊஞ்சல் கட்டி அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று திருவோண சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கேரளாவில் மட்டுமல்லாது குமரி மாவட்டத்திலும் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இங்கும் அத்தப்பூ கோலம், ஓண ஊஞ்சல், கயிறு இழுத்தல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன. ஓண பண்டிகைக்காக குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இது போல தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.