வங்கியில் பண மோசடி வழக்கு- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..!!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது நண்பர்கள், வங்கியில் ரூ.40.92 கோடி கடன் வாங்கி, அதை வணிகத்துக்கு பயன்படுத்துவதாக கூறி, பணத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். மலேர்கோட்லாவில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடந்தது. மேலும் அவரது கூட்டாளிகள் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. வங்கி மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் சிலரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் டெல்லியில் கலால் வரி ஊழல் வழக்கு தொடர்பாக பஞ்சாபில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருந்தது.