அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி பேஸ்புக்கில் ஒளிபரப்பிய வாலிபர் கைது..!!
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. டென்னசி மாகாணம் மெம்பிஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த வாலிபர் ஒரு கடைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தான் வந்த வாகனத்தை மற்றொரு கார்மீது மோதினார். பின்னர் அந்த காரில் ஏறி தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த சிலரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர். விசாரணையில் அவர் 19 வயதான எசேக்கியேல் கெல்லி என்பதும், அவர் தான் நடத்திய தாக்குதலை பேஸ்- புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு பொது மக்களை உஷார்ப்படுத்தினர். சந்தேகப்படும் நபர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தாக்குதல் நடத்தியவர் டென்னசி மாகாண எல்லை வழியாக ஆர்கன்சாசுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய எசேக்கியேல் கெல்லியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.