தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )
தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல் ( படங்கள் இணைப்பு )
யாழ் நீர்வேலியைத் தளமாகக் கொண்டு இயங்கும் கிறீன் லேயர் ( Green layer ) சுற்றுச்சூழல் அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பசுமைப் புரவலர் விழா 2022 நிகழ்வு 04.09.2022 அன்று கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாணத்தில் மரநடுகையில் ஈடுபட்டுள்ள 28 மரநடுகை இயக்கங்கள் , தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் , பிரதேச சபை நிர்வாகங்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வினை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் இரட்ணசிங்கம் சர்வேஸ்வரா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார் .
யாழ் மாவட்ட அரச அதிபர் திரு . மகேசன் , யாழ் மாவட்ட
மேலதிக அரச அதிபர் திரு.பிரதீபன் , யாழ்ப்பாணம் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.மு.இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு. சண்முகலிங்கன் மற்றும் வணிகத்துறை பேராசிரியர் திரு. வேல்நம்பி , பேராசிரியர் திரு.கிருஸ்ணராஜா , விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , சமூக செயற்பாட்டாளர் செல்வின் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இதுவரை கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்பினால் 10000 மரக்கன்றுகளை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் , சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனர்களிலொருவரான அமரர் வே.சு. கருணாகரன் , வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .
வளம்மிக்க மண்ணில் மரநடுகை மேற்கொள்வதென்பது ஓரளவு இலகுவானது . ஆனாலும் தீவகம் போன்ற வரண்ட நிலத்தினையுடைய பிராந்தியத்தில் மரநடுகையை மேற்கொண்டு தொடர்ந்து பராமரிப்பதென்பது கல்லில் நார் உரிப்பது போன்றதே . அந்நிலையிலும் தீவகத்தில் மரநடுகையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) , அனலைதீவு பசுமை குழுமம் ( Green Analai ) , நயினாதீவு நாகம் குழுமம் , புங்குடுதீவு பசுமைப்புரட்சி குழுமம் , போன்ற அமைப்புக்களுக்கும் புங்குடுதீவு உலக மையம் சார்பாக புங்குடுதீவில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக கடந்தகாலங்களில் பொதுமக்களுக்கு ஏராளமான மரக்கன்றுகள் , தென்னங்கன்றுகளை தனது சொந்த பணத்தில் வழங்கிய புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் உறுப்பினர் திரு .மயூரதன் ( பிரித்தானியா ) அவர்களுக்கும் பசுமைப் புரவலர் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.