;
Athirady Tamil News

தமிழகத்தில் நீட் தேர்வில் 50 சதவீதம் பேர் தோல்வி: கடந்த வருடத்தை காட்டிலும் தேர்ச்சி தேர்ச்சி விகிதம் சரிவு..!!

0

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவு செப்டம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனால் நேற்று காலையில் இருந்தே தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெளியாகும் என இணையதளத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்து இருந்தனர். ஆனால் இரவு 11 மணி வரை முடிவு வெளியாகவில்லை. அதன் பிறகு தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தை விட சற்று குறைந்துள்ளது. நீட் தேர்வில் அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா 720 மதிப்பெண்ணுக்கு 715 மதிப் பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

அவரை தொடர்ற்து டெல்லி மாணவர் வத்சா அஷிஸ் பட்ரா 2-ம் இடமும், கர்நாடகா மாணவர்கள் 2 பேர் 3-வது 4-வது இடத்தையும் வகித்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று 30-வது இடம் பிடித்தார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று பட்டியலில் 43-வதுஇடம் பிடித்தார். தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 51.3 சதவீதமாகும். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரும், ராஜஸ்தானில் 82 ஆயிரத்து 548 பேரும் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணம் குறித்து கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறியதாவது:- நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விரும்பி படிப்பது இல்லை. விருப்பத்துடன் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். கட்டாயப்படுத்தி படிப்பதால் தான் தேர்ச்சி விகிதம் குறைகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவில் அரசு, மாணவர்கள், பெற்றோர்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்ற மனப்பான்மை தான் மாணவர்களிடம் உள்ளது. வேறு வழியில்லாமல் தான் இத்தேர்வை எழுதுகிறார்கள். விரும்பி படிக்கும் மனப்பான்மை கிடையாது. மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் வழியாக நீட் பயிற்சி பெற்றுள்ளனர். நடுத்தர வகுப்பினரும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதிக செலவு செய்து பயிற்சி பெற வாய்ப்பு இல்லை. அதனால் தான் இத்தகைய தேர்ச்சி விகிதம் அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.