அதிக அமைச்சர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு!!
அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை நியமனத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பாரதூரமான முறையில் நாடு வக்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன நேரத்தில், அரசாங்கத்தால் தன்னிச்சையாகவும்,நெறிமுறையற்றதுமாக பிரதி அமைச்சர்கள் 37 பேரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை நியமிப்பது இத்தருணத்தில் நாட்டிற்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது மேலும் இந்நாட்டை அதலபாதாளத்திற்குத் தள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகிறது.
இந்த வீணான நிலைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு போலவே குடிமக்கள் போராட்டத்தின் நோக்கங்களை மீறி இந்த மிகப் பெரிய அமைச்சரவையை நியமித்ததன் மூலம் அரசாங்கம் பழைய வழமையான பாதையில் பயணிக்கிறது என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது.
இதன் பிரகாரம், இந்த பாரிய அமைச்சரவை நியமிப்பதற்கு
எதிராக நேற்று (08) கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் எதிர்ப்புப் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றியது குறிப்பிடப்பட்டுள்ளது.