யாழில். வீதி புனரமைக்கு பறிக்கப்பட்ட மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வீதியோரமாக குவிக்கப்பட்டு இருந்த மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , திருடப்பட்ட மணல் மற்றும் கற்களை மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – சங்கரத்தை வீதி புனரமைப்பு பணிக்காக துணைவி பகுதியில் மணல் மற்றும் கற்கள் வீதியோரமாக பறிக்கப்பட்டன. அவற்றில் 30 க்யூப் மணல் மற்றும் 15 கியூப் கற்கள் என்பன களவாடப்பட்டு இருந்தன.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அங்கு களவாடப்பட்ட மணல் மற்றும் கற்கள் மானிப்பாய் அட்டகிரி எனும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் திருடப்பட்டு , மறைத்து வைக்கப்பட்டிருந்த மணல் மற்றும் கற்களை மீட்டதுடன் . சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.