பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு- இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு..!!
பிரிட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
ராணி எலிசபெத் மறைவுக்கு முதல் கட்டமாக பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.