மோசடி புகாரில் சிக்கிய பிஷப் வீட்டில் கத்தை, கத்தையாக ரொக்கப்பணம், நகைகள் பறிமுதல்..!!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மறைமாவட்டத்தின் பிஷப் ஆக இருப்பவர் பி.சி.சிங். இவர் மறை மாவட்டத்தின் சர்ச் ஆப் நார்த் இந்தியா கல்வி வாரியத்தின் தலைவர் என்ற முறையில் கல்வி நிறுவனங்களின் கட்டணங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.70 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2004-2005 முதல் 2011-2012 வரை சுமார் ரூ.2.70 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பி.சி.சிங் தலைமறைவானார். அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள் மட்டுமின்றி கத்தை கத்தையாக ரொக்கப்பணம் மற்றும் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நோட்டு எண்ணும் எந்திரங்களை வரவழைத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணினர். இதில் அங்கிருந்து ரூ.1 கோடியே 65 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 118 பிரிட்டிஷ் பவுன்டுகளும் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மட்டுமின்றி கூடுதலாக 17 சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும், 48 வங்கி கணக்குகள் மற்றும் ரூ.80.72 கோடி மதிப்புள்ள நகைகள் தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிஷப் பி.சி.சிங் மீது உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மோசடி உள்ளிட்ட 84 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.