ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா? புகைப்படம் வெளியிட்டு பாஜக விமர்சனம்..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
அவ்வகையில், இன்று பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவு வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாக பலர் பதிவிட்டுள்ளனர். ராகுல் காந்தியின் யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்திருப்பதை, அக்கட்சியின் டுவிட்டர் பதிவு காட்டுவதாக ஒரு பயனர் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ஆடைகளுக்கு பொது மக்களின் பணத்தை செலவு செய்யவில்லை என்று மற்றொரு பயனர் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து புதன்கிழமை யாத்திரை தொடங்கியபோது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்த யாத்திரையை தாம் வழிநடத்தவில்லை என்றும், அதில் பங்கேற்பதாகவும் கூறினார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதை தனது யாத்திரை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.