போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் : சர்வதேச மன்னிப்புச் சபை!!
இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை, அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதையும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அதியுச்ச பலத்தைப் பயன்படுத்துவதையும், போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பியதையும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பழிவாங்குவதையும் வெளிப்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு, இந்த உரிமையை பாதுகாக்க அரசுக்கும் கடமை உள்ளது, ஆனால் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மக்களின் குரலை நசுக்கியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், 140க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 18 பேருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களை “பயங்கரவாதிகள்” என்று பலமுறை வர்ணித்துள்ளனர். மூன்று போராட்டக்காரர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவதாக உள்ளது, அதை ரத்து செய்ய வேண்டும்.
அமைதியான முறையில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டங்களில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு அரசாங்கத்தை கோருவதாகவும், அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், சர்வதேச ஆதரவுடன் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து உடனடி, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.