இளவரசி கேட் மிடில்டன் மற்றும் மேகன் 2-ம் எலிசெபத் ராணியின் இறுதி நிமிடங்களில் காண செல்லாதது ஏன்..!!
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – கமிலா தம்பதியினர் மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு இளவரசர் வில்லியம், சஸ்செக்ஸ் பிரபு இளவரசர் ஹாரி ஆகியோர் மகாராணியுடன் இறுதி நிமிடங்களில் உடனிருந்தனர்.
இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு நேற்று தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் கிடைத்ததும், பால்மோரல் அரண்மனைக்கு முதலில் வந்தவர்களில் இளவரசர் சார்லஸ்(தற்போதைய மன்னர்), அவரது மனைவி கமிலா மற்றும் ம்ன்னர் சார்லசின் சகோதரி இளவரசி அன்னே ஆகியோர் அடங்குவர்.
ராணியின் மற்ற இரண்டு மகன்களான இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர், வில்லியம் உடன் சேர்ந்து சிறிது தாமதமாக வந்தனர். இந்நிலையில், மகாராணியை காண இளவரசர் வில்லியம் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு சென்றார். ஆனால் அவருடன் மனைவி கேட் மிடில்டன் செல்லவில்லை. கேட் மிடில்டன் தனது குழந்தைகளுடன் இங்கிலாந்தில் உள்ள விண்ட்சரில் தங்கினார்.
கேட் மிடில்டன் தனது கணவருடன் ராணியை காண செல்லாமல் அடிலெய்டு இல்லத்தில் தங்கினார். அவர் தங்கியுள்ள வின்ட்சர் கோட்டையிலிருந்து பள்ளிக்கு சென்று தன் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதைக் காண முடிந்தது.
இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதியினரின் குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர் தங்கள் புதிய பள்ளிக்கு முதல் நாளாக நேற்று சென்றிருந்தனர். இதனால் அவர்கள் மாலை வரும் வரை காத்திருந்து அவர்களை கோட்டைக்கு அழைத்து வந்தார் கேட் மிடில்டன். இதன் காரணமாக, அவர் இங்கிலாந்தில் உள்ள விண்ட்சரில் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இளவரசர் வில்லியம் ராணியின் இறப்பிற்கு முன் கேம்பிரிட்ஜ் பிரபு என்ற பட்டத்தை பெற்றார். ‘வேல்ஸ் இளவரசர்’ என்ற பெருமைமிகு பட்டம் அரச வாரிசுக்காக ஒதுக்கப்பட்டது. தற்போது மன்னராக பொறுப்பேற்றுள்ள சார்லஸ் இதுவரை அப்பதவியை வகித்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசராகவும், அவரது மனைவி கேட் மிடில்டன், வேல்ஸ் இளவரசியாகவும் மாற வாய்ப்புள்ளது.
அதேபோல, இளவரசர் ஹாரியும் தனது மனைவி மேகனை விட்டுவிட்டு ஸ்காட்லாந்துக்கு தனியாக புறப்பட்டார். சஸ்செக்ஸ் பிரபுவான ஹாரி மற்றும் மனைவி மேகன் நேற்று மாலை லண்டனில் நடந்த வெல்சில்ட் விருதுகளில் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் மகாராணியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் திட்டத்தை ரத்து செய்தனர்.பின்னர், இளவரசர் ஹாரி மட்டும் ஸ்காட்லாந்துக்கு தனியாக புறப்பட்டார்.