PTA யை நீக்க கோரி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை ஊர்தி வழி பேரணி!!
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை நீக்க கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ளது.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி கி. சேயோன், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையிலேய போராட்டம் தொடர்பாகவும் அதில் அனைவரையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் அந்த ஊடக அறிக்கையிலேய 1979 ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம். இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே இன்றும் தொடர்கின்றது. குறிப்பாக தற்போது காலி முகத்திடல் அகிம்சைவழி போராட்டக்காரர்களை கைதுசெய்யவும் இச்சட்டமே பயன்படுத்தப்படுகின்றது.
காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய ஊர்தி வழிப் போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்துவதாகும்.
அதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தயவாக எங்களுடன் சேர்ந்து, இப்பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுங்கள் – என்றுள்ளது.