பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது – இந்தியத் துணைத்தூதர் தெரிவிப்பு!!
பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது மாறாக எமது அறிவே விருத்தி அடையும் என யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியின் 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இந்தியத் துணைத் தூதர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி சமஸ்கிருதம், பாளி,ரஷ்யன்,சீன மொழிகள் உட்பட பலவற்றை தெரிந்திருந்தார். பிறமொழியை கற்பதால் எமது மொழியையோ கலாசாரத்தையோ இழந்து விடுவோம் என்கிற பயம் தமிழர்களிடம் காணப்படுகிறது.
இன்றைய நவீன உலகத்தில் கலாச்சாரங்களை புரிந்து கொள்வதற்கு மொழி அவசியம்.ஒரு மொழியை அதிகம் கற்றால் இன்னொரு மொழியை இழந்து விடுவோமோ என்கிற பயம் தேவையில்லை. அது அறிவுடன் சம்பந்தப்பட்டது. உணர்வுபூர்வமாக தாய்மொழி மீது இருக்கின்ற பற்று என்பது எப்போதும் எம்மை விட்டுச் செல்லாது.எமது கலாச்சாரத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் மற்றவர்களுக்கு கலாச்சாரத்தை நாம் புரிந்து கொள்வதற்கு மொழி அவசியம் – என்றார்.
யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஹிந்தி மொழி கற்கைநெறி சமூக வலைத்தளத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”