காசநோய் இல்லாத இந்தியா திட்டம்- குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்..!!
பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும் இதற்கு முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும்.
நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு உள்ளது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.நோய் தாக்கத்திற்கு முன்பாகவே அதில் இருந்து காப்பது சாத்தியமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நோயிலிருந்து மக்களை காப்பதற்கும், இலவசமாக மருத்துவ வசதி அளிப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நோய் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய் ஏற்படுகிறது. சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.