அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை – கிம் ஜாங் அன்..!!
போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியைத் தடுக்க அணுகுண்டுகளை தானாகப் பயன்படுத்தலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார். அமெரிக்காவுடன் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் தென் கொரியாவின் திட்டம் குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், தென் கொரியாவின் நடவடிக்கை வடகொரியாவிற்கு ஆபத்தானது என தெரிவித்தார்.