மத்திய – மாநில அறிவியல் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!
ஒத்துழைப்பு கூட்டாட்சியை ஊக்குவிக்கும் விதமாக இம்மாநாட்டில் நாடுமுழுவதும் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாதில் உள்ள அறிவியல் நகரில் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
முதற்கட்ட மாநாட்டில் வலுவான அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் புதுமையான சுற்றுசூழலை உருவாக்குவதே நோக்கம் மத்திய – மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் நிகழ்வில் கூடியிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார். நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்கும் முயற்சியில் முதல் முறையாக இத்தகைய மாநாடு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் வலுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) சூழலைக் கட்டமைக்க கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுடன் மத்திய- மாநில ஒத்துழைப்பு நடைமுறையை இது வலுப்படுத்தும்.
எஸ்டிஐ தொலைநோக்கு 2047, மாநிலங்களில் எஸ்டிஐ வளர்ச்சிக்கான பார்வை மற்றும் எதிர்கால வளர்ச்சிப்பாதைகள், சுகாதாரம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார வசதி, 2030-க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இருமடங்கு ஆக்குதல், வேளாண்மை – விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொழில்நுட்ப தலையீடுகள், தண்ணீர் – தூய்மையான குடிநீர் தயாரிப்பதற்கான புதிய கண்டுபிடிப்பு, எரிசக்தி – ஹைட்ரஜன் இயக்கத்தில், அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்பு உட்பட அனைவருக்கும் தூய எரிசக்தி, கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கும் பொருத்தமான ஆழ்கடல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மையப்பொருள்களில் இந்த மாநாட்டின் அமர்வுகள் நடைபெறும் என தெரிகிறது. இந்த வகையில், முதலாவதான மாநாட்டில் குஜராத் முதல்-மந்திரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், தொழில் முனைவோர், அரசு சாரா அமைப்புகள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.