ராணி எலிசபெத் மறைவு – இங்கிலாந்து பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி..!!
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ராணி எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரசும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்வானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இங்கிலாந்தின் வர்த்தகத் துறை மந்திரியாகவும், வெளியுறவுத் துறை மந்திரியாகவும் பதவி வகித்த லிஸ் ட்ரஸ், அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து அரச குடும்பத்திற்கும், இங்கிலாந்து மக்களுக்கும் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.