காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் அடிமை – பாஜக மந்திரி காட்டம்..!!
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்று தெளிவாக தெரியவில்லை. அதேவேளை, காங்கிரஸ் தலைவருக்கு போட்டியிட சசிதரூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை என்று வலியுறுத்தி சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேவேளை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய பாத யாத்திரை கேரளா சென்றடைந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவரும், அரியானா உள்துறை மந்திரி அனில் விஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் அடிமை, அதிலிருந்து வெளியேற நினைக்க முடியாது. காந்தி குடும்பத்தில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லை’ என்றார்.