மகளிர் ஆணைய தலைவி, பெண் போலீஸ் அதிகாரி இடையே மோதல்; ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு..!!
அரியானாவில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டும் 3 முறை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி கூறியும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில மகளிர் ஆணைய தலைவி ரேணு பாட்டியா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட அந்த பெண் இன்ஸ்பெக்டரும் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. ‘குற்றம் சாட்டப்பட்ட நபரை நீங்கள் அடித்திருக்க வேண்டும், ஆனால் அந்த பெண்ணை 3 முறை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறீர்கள்.
இங்கிருந்து வெளியே போங்கள். உங்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும்’ என ரேணு கூறினார். இதற்கு பதிலளித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ‘இங்கு நாங்கள் அவமானப்படுவதற்காக வரவில்லை’ என பதிலளித்தார். உடனே ரேணு, அப்படியானால் அந்த சிறுமியை அவமதிக்கவா வந்தீர்கள்? என ஆவேசமாக கேட்டார். இப்படியாக இருவரும் காரசாரமாக பேசிக்கொள்ள, ஒரு கட்டத்தில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை சக அதிகாரிகள் வெளியே அழைத்து சென்றனர். இந்த வீடியோ பதிவு வைரலாக பரவி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.