பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்கமுடியாது – த.சித்தார்த்தன்!!
பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சட்டமே முழுமையாக நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித காரணங்களுமின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சட்டமே முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவுடன் செல்லும்போது இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு வலு காணப்படும். கையெழுத்து திரட்டும் இந்த நடவடிக்கையில் இன மத பேதமின்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளோம். இந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் இல்லாவிடில் அது நீக்கப்படும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.