மத்தியில் ஆளும் பாஜகவிடம், தேசியவாத காங்கிரஸ் ஒரு போதும் சரணடையாது: சரத்பவார்..!!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் உரையாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் போராட்டங்களைக் கையாள்வது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவது குறித்து மோடி அரசாங்கத்தை சரத்பவார் கடுமையாக சாடினார்.
அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய மத்திய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். நாம் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
ஒரு மித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம் வகுக்க வேண்டும். சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கூட்டு போராட்டத் திட்டங்களை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறியுள்ளதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத்பவார் போட்டியிட மாட்டார். பவார் ஒரு போதும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரவில்லை.
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எங்கள் கட்சி சிறியதாக இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார். காங்கிரசுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு படேல் குறிப்பிட்டார்.