சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு ஆலோசனைகள்..!!
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள். ஆனால் கொரோனா காரணமாக நாடு திரும்பிய அவர்கள் விசா தடை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் தற்போது 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். 2 ஆண்டு விசா தடைக்கு பின்னர் இப்போதுதான் சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, அங்கு வருவதற்கு விசா வழங்க தொடங்கி உள்ளது. ஆனால் அவர்களில் பலரும் நேரடி விமான சேவையின்றி தவிக்கின்றனர். இதையொட்டி இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கிறது.
இதற்கு மத்தியில் சீன மருத்துவ கல்லூரிகள் இந்தியா உள்ளிட்ட பிற மாணவர்களை மருத்துவ படிப்புக்காக பதிவு செய்யத்தொடங்கி உள்ளது. இந்தநிலையில் சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புகிற மாணவர்களுக்கு விரிவான ஆலோசனை குறிப்புகளை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கிற சிரமங்கள், இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கடுமையான நடைமுறைகள் உளளிட்டவை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் 40 ஆயிரத்து 147 பேர், இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வினை 2015-2021 கால கட்டத்தில் எழுதினர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,387 பேர் மட்டும்தான்.
* சீனாவில் அந்த காலகட்டத்தில் 45 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 16 சதவீதத்தினர்தான். சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* சீனாவில் கட்டணங்கள் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் மாறுபடுகின்றன. சேர்க்கைக்கு முன்பாக மாணவர்கள் பல்கலைக்கழகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
* சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 5 ஆண்டு மருத்துவ படிப்பு, அத்துடன் ஓராண்டு பயிற்சிக்கு பட்டியலிடப்பட்டுள்ள 45 மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சேரக்கூடாது.
* சீன அரசு ஆங்கில மொழியில் 45 பல்கலைக்கழகங்களில்தான் மருத்துவ படிப்பை வழங்குகிறது
* மருத்துவ பயிற்சி அமர்வுக்கு சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். அதுவும் எச்.எச்.கே.-4 அளவுக்கு கற்க வேண்டும். இந்த திறன் இல்லாதோருக்கு பட்டம் வழங்கப்பட மாட்டாது.
* சீனாவில் டாக்டர் தொழில் நடத்துவதற்கு அங்கு அதற்கான உரிமம் பெற வேண்டும்.
* 5 ஆண்டு மருத்துவ படிப்பும், ஓராண்டு பயிற்சியும் முடித்தவர்கள் சீன மருத்துவ தகுதி தேர்வில் வெற்றி பெற்று, டாக்டருக்கான தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
* சீனாவில் மருத்துவம் படித்து இந்தியாவில் டாக்டர் தொழில் செய்வதற்கு, இந்தியாவில் நடத்தப்படுகிற தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும்.
* சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாக வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க இது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.