ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆப்பிள் – எப்படி தெரியுமா..!!
பிரட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்து சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. இரங்கல் செய்தியுடன் ராணி எலிசபெத் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.
ஆப்பிள் வலைதளத்தில் உள்ள ராணி எலிசபெத் புகைப்படத்தை 1952 ஆம் ஆண்டு டோரோத்தி வைல்டிங் எடுத்தார் என கூறப்படுகிறது. ராணி எலிசபெத் மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி அரசி அல்லது மன்னர் உயிரிழந்தார் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அங்கு ராணியின் உடல் மூன்று நாட்களுக்கு வைக்கப்பட இருக்கிறது. அந்த மூன்று நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலி செலுத்தலாம்.