படிக்காத வருசத்துக்கும் பணம் கட்ட வேண்டும் யாழ். பல்கலையில் வெளிவாரி அலகு அடாவடி!
யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவினால் நடாத்தப்படும் வணிகமாணி கற்கை நெறியில் நான்காம் வருட சிறப்புக் கற்கையைத் தொடராமல் வணிகமாணி பொதுத் தகைமையுடன் வெளியேறும் மாணவர்கள் நான்காம் வருடத்துக்கான கட்டணத்தையும் கட்டினால் மட்டுமே பட்டச்சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து உடனடியாகத் தலையிட்டு தமக்குத் தீர்வொன்றைத் தருமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
யாழ். பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்புகள் அலகினால் நடாத்தப்படும் வணிகமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது வருடமொன்றுக்கான கற்கைக் கட்டனமாக ரூபா 39,000.00 அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கல்வி கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலும் அவ்வாண்டுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி கல்வியைத் தொடர முடியும். அதே நேரம் கற்றல் காலத்தில் மூன்றாவது வருடத்தைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் வணிகமானி பொதுத் தகைமையுடன் தங்கள் கற்கைநெறியை நிறைவு செய்ய முடியும். நான்காம் வருடத்தைத் தொடரும் மாணவர்கள் வணிகமாணி சிறப்புப் பட்டத்தைப் பெறமுடியும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சிறப்புப் பட்டத்துக்கான கல்வியைத் தொடர முடியாத பலர் வணிகமாணி பொதுத் தகைமையுடன் தமது கல்வியை நிறுத்திக் கொண்டுள்ளனர். இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தி அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்கும் அவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், நான்காம் வருடக் கல்வியைத் தொடராமல், நிதி நிலைமை காரணமாக மூன்றாம் வருடத்துடன் கல்வியை நிறுத்திக் கொண்டவர்கள் கூட, நான்காம் வருடத்துக்குரிய கட்டணமாக ரூபா 39 ஆயிரத்தைச் செலுத்தினால் மடடுமே பட்ட உறுதிப்படுத்தல் கூற்று, விவரணப் பெறுபேற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும், கட்டத் தவறுபவர்களுக்கு அவை வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமையானது அப்பட்டமான உரிமை மீறலாகும் எனவும், கற்காத ஆண்டுக்கும் பணத்தைச் செலுத்த வேண்டுமாயின் தாங்களும் நான்காம் வருடத்தைப் பயின்று சிறப்புப் பட்டத்துடன் வெளியேறியிருக்க முடியும் எனவும் மாணவர்கள் விசனத்துடன் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”