வெறுப்பின் மூலம் நாட்டை ஒன்றிணைக்க முடியாது- ராகுல் காந்தி பயணம் குறித்து ஆர்.எஸ்.எஸ்.கருத்து..!!
ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை படிப்படியாக அடைவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மூன்று நாள் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்ட நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளதாவது:
இந்திய மக்களை இணைக்கும் வேலையை யாராவது செய்தால் அது நல்ல விஷயம்தான், ஆனால் வெறுப்பின் மூலம் எப்படி இணைவது? உண்மையான அர்த்தத்தில் மக்களை இணைக்கும் கூறுகளை அங்கீகரித்து நாட்டை ஒன்றிணைக்க அவர் (ராகுல்காந்தி) முயற்சித்தால், வரவேற்கப்படுவார். இல்லையெனில், நீங்கள் வெறுப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முயற்சித்தால், அது ஒரு அரசியல் வித்தையாக இருக்கும்.
மக்களை இணைக்கும் நோக்கத்திற்கு உதவாது. அவர்கள் (காங்கிரஸ்) நீண்ட காலமாக (ஆர்.எஸ்.எஸ். மீது) வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவரது ( ராகுல் காந்தி) முன்னோர்கள் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) அவமதித்துள்ளனர். அதை தடுக்க தங்கள் முழு பலத்தையும் செலுத்தினர். இரண்டு முறை தடை விதித்தனர். ஆனால் எங்களிடம் உண்மையான கொள்கைகள் இருப்பதால் சங்கம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், சங்கம் தொடர்ந்து வளர்ந்தது.
காங்கிரஸால் ட்வீட் செய்யப்பட்ட தீயில் எரியும் காக்கி உடை படம் அவர்களின் வெறுப்பை பிரதிபலிக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்தியாவின் ஆன்மீக அடையாளம் இந்துத்துவா என்று அழைக்கப்படுகிறது. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.