கொச்சி விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!!
அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் துபாயில் இருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணி ஒருவரின் உடமையை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணியின் உடமைகளில் எதுவும் இல்லை என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அவரது உடல் முழுவதும் சோதனை நடத்தினர். மேலும் அவரது வயிற்றையும் ஸ்கேன் செய்து பார்த்தனர். இதில் அந்த பயணியின் ஆசன வாயில் காப்ஸ்யூல் வடிவில் ஒரு பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 42 லட்சமாகும். இதையடுத்து அந்த பயணியும் கைது செய்யப்பட்டார். அவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். அந்த பயணி யாருக்காக தங்கம் கடத்தி வந்தார் என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.