திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 20-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது..!!
திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலை, இரவு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. விழா நிறைவு நாளான 28-ந்தேதி பஞ்சம தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக இணை அலுவலர் வீர பிரம்மம் கூறுகையில்:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பிரமோற்சவ விழா நடைபெற்றது. தற்போது தொற்று குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் விழாவில் அனுமதிக்க உள்ளனர். மாட வீதிகளில் சாமி வீதி உலாவை காண பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, கூடுதல் பஸ் போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.