வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் மனு..!!
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது. இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்தது.
தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டை அணுகியிருப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு லாலுவின் கோரிக்கையின் பேரில், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விடுவிப்பதற்கு சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த ஜூன் 14-ந்தேதி உத்தரவிட்டது.