குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு..!!
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு சென்றார். ஆமதாபாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக சமூக சேவகி மேதா பட்கரை நிறுத்தப்போவதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:-
குஜராத் தேர்தலில் பா.ஜனதா தோற்கப்போகிறது. அதனால், மேதா பட்கர் இல்லாவிட்டால், வேறு ஏதேனும் ஒரு பெயரை எழுப்புவார்கள். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்தது? அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன செய்யப்போகிறது? என்று மக்கள் கேட்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது. அக்கட்சியின் கேள்வியை பற்றி கவலைப்படாதீர்கள்” என்று கூறினார்.