;
Athirady Tamil News

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது..!!

0

சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. இதேபோல வெளிநோயாளிகள் பிரிவிலும் வழக்கத்தை விட 25 சதவீதம் பேர் கூடுதலாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவை குழந்தைகளுக்கு பொதுவாக பரவுகிறது.

காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும், இருமல் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது அடங்க மறுப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு தேக்கரண்டி தேன் வெது, வெதுப்பான சுடு நீரில் கலந்து குடிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வருகிறார்கள்.

சமீப காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வேகமாக பரவுவதற்கு வானிலையில் நிலவும் மாற்றம் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற நடைமுறை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அந்த காலக்கட்டங்களில் காய்ச்சல் பரவலுக்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இதனால் வைரஸ்கள் வேகமாக பரவும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றன.

சுவாச நுண் குழல் அழற்சி வைரஸ் உள்பட பல்வேறு வைரஸ்கள் தற்போது பரவுகிறது. இதனால் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது.

இதில் இருந்து தப்புவதற்கு, கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.