கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்..!!
கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் உள்ளார். 40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 20 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவா மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த ஷெட் தனவாடே கூறும் போது, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிவித்தார். திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சியோ செக்வேரா, ரூடால்ப் பெர்ணான்டஸ் ஆகிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை சபாநாயகரை சந்தித்து பேசி இருந்தனர். சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில் சபாநாயகரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது அவர்கள் பா.ஜனதாவில் சேருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இன்று கோவா மாநில முதல்-மந்திரியை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர்.
அதன் பிறகு அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடாரம் காலியானது. அக்கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்களே தற்போது உள்ளனர். கடந்த ஜூலை மாதம் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது. அப்போது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் திகம்பர் காமத், மைக்கேல் லோபோலை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது.
அதன் பின் காங்கிரஸ் கட்சி தலைமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களை சமரசப்படுத்தியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தான் இன்று 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர் வேறு கட்சியில் சேர உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.