குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது..!!
இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அப்போது ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதியில் 6 கிலோ மீட்டர் வரை நுழைந்து இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் இரண்டு விரைவு படகில் துரத்தி சென்று பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதை சோதனை செய்தனர். கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் படகில் நடத்திய சோதனையில் 40 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும்.
இந்த போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரூ.200 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பாகிஸ்தானின் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது.போதை பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் இருந்து புறப்படும் படகில் ஹெராயின் கடத்தப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குஜராத்தில் அவை தரை இறக்கப்பட்டு பஞ்சாப்புக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக அறிந்தோம். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் படகை வழி மறித்து பிடித்தோம். 40 கிலோ ஹெராயினுடன், 6 பாகிஸ்தானியர்களை கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், கடலோர காவல் படையினரும் இதே போன்று கடந்த காலங்களில் குஜராத் கடல் பகுதி வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்றதை முறியடித்து இருந்தனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களை அதிக அளவு போதை பொருளுடன் பிடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.