39% பேர் போதிய உணவு உண்பதில்லை!!
சுமார் 8.7 மில்லியன் இலங்கை மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது கடும் சரிவு என்றும் இலங்கை உணவில் புரதத்தின் முக்கிய ஆதாரமான மீன் நுகர்வு சராசரியாக வாரத்துக்கு 0.8 நாட்கள் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.4 சதவீத குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவை உட்கொண்டு வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
செப்டெம்பர் 5ஆம் திகதிமுதல் 9ஆம் திகதி வரை 22 ஆயிரம் பேருக்கு பண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் 120, 716 பேருக்கு இம்மாதத்துக்குள் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
உதவிகள் இன்றி எதிர்வரும் மாதங்கள் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்றும் விலை உயர்வுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐந்தில் இரண்டு குடும்பங்கள் ஏற்கெனவே தங்களது வருமானத்தில் 75 சதவீதத்தை உணவுக்காகச் செலவிடுகின்றனர் என்றும் உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.