பாகிஸ்தானிலிருந்து குஜராத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..!!
போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையும், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது. நேற்றிரவு பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று, சந்தேகத்திற்கிடமான வகையில் குஜராத் அருகே கடற் பகுதிக்குள் வந்தது.
இதையடுத்து இரண்டு ரோந்து கப்பல்கள் மூலம் அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் 40 கிலோ கிராம் எடையுள்ள போதை பொருளை அவர்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் மேல் விசாரணைக்காக அந்த படகை ஜக்காவுக்கு கொண்டு சென்றனர்.