கேரளாவில் 18 நாட்கள்…உத்தர பிரதேசத்தில் மட்டும் 2 நாட்கள் ஏன்?- சீதாராம் யெச்சூரி..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.
நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது. இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல.
பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.