சில அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளது – சோனியாகாந்தி குற்றச்சாட்டு..!!
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று ஒரு ஆங்கில பத்திரிகையில் கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கஷ்டப்பட்டு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிரண்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, வளங்களும், வாய்ப்புகளும் அனைத்து குடிமக்களையும் சென்றடைய வேண்டும் என்று செயல்பட்டோம்.
100 நாள் வேலை திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ‘ஆஷா’ சுகாதார பணியாளர்கள், ஆதார், தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளிட்டவை ஏராளமானோரை வறுமையில் இருந்து விடுவிக்க உதவின. மேட்டுக்குடியினரும், அப்போதைய எதிர்க்கட்சிகளும் அத்திட்டங்களை கேலி செய்தனர். இருப்பினும், கொரோனா காலத்தில் அத்திட்டங்கள்தான் உயிர் மூச்சாக அமைந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளது.
அது ஜனநாயகத்தையும், அமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. அமைப்புகளின் சுதந்திரம் தகர்ந்து வருகிறது. சர்வாதிகார மனப்பான்மை தெளிவாக தெரிகிறது. அடிப்படை உரிமைகள் தகர்க்கப்படுகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காக வாக்காளர்களை பயன்படுத்தும் நோக்கத்தில் சமூக நல்லிணக்கம் சிதைக்கப்படுகிறது. முன்பு சுதந்திரமாக செயல்பட்ட அமைப்புகளின் தலைவர்கள், அதிகாரவர்க்கத்தின் கருவிகளாக மாறிவிட்டனர். தேர்தல் முடிவுகள், பணபலம் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. நலிந்த பிரிவினர், பெண்கள், சிறுபான்மையினர் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கப்படாததால், வீதியில் இறங்கி போராட வேண்டி உள்ளது. இந்த ஆபத்தான போக்கு, நமது தேசிய பண்புகளை பலவீனப்படுத்தி, எதிரிகளுக்கு வாசலை திறந்து விடுவதாக அமைந்து விடும். ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமானால், மக்கள் ஒன்றுதிரண்டு இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இந்தியா களைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.