பாட்டலிக்கு எதிரான விசாரணைக்கு தடை !!
ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணையை அடுத்த வருடம் மார்ச் 15ஆம் திகதிவரை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம், இன்று (15) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.
மேலும், பிரியந்த ஜயவர்தன, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், பாட்டலி எம்.பியின் மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க அனுமதி வழங்கியது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொய்யான சாட்சியங்களை சோடனை செய்தமை, சதி செய்தமை மற்றும் பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சம்பிக்க மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
வாகன விபத்து தொடர்பான தனது மறுசீராய்வு மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.