நடைபயணத்திற்கு ஓய்வு- ராகுல் காந்தி இன்று மீனவர்கள், விவசாய தொழிலாளர்களுடன் சந்திப்பு..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று காலை கல்லம்பலத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கிய அவர் வர்கலாவில் உள்ள சிவகிரி மடத்திற்கு சென்றார். அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்டார். பின்னர் கடம்பாட்டு கோணம் சென்றடைந்தார். இரவு சாத்தனூர் சென்றடைந்த அவர் இன்று பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுத்துள்ளார். ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடந்துள்ளார்.
இதனால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் ஓய்வு எடுத்து கொள்வதாக தெரிகிறது. நாளை அவர் மீண்டும் நடைபயணம் தொடங்குவார். அதற்கு முன்பு இன்று கொல்லம் சாத்தனூரில் கேரள மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாநில தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதிலும் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.