லாரி மோதி தாய் குரங்கு காயம்- கண்ணீர் விட்டு பாசத்தை வெளிப்படுத்திய குட்டி குரங்கு..!!
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், சிதுரு மாமுடி மண்டலம், முனுக்களூர் சாலையோரம் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் அங்குள்ள மரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தது. தாய் குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடக்க வேகமாக ஓடியது.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று சாலையை கடக்க முயன்ற தாய் குரங்கு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு படுகாயம் அடைந்து வலியால் துடித்தது. தாய் குரங்கு லாரியில் அடிபட்டு காயமடைந்து துடிப்பதை கண்ட குட்டி குரங்கு அதன் அருகே சென்று தாயின் மீது தனது கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் பரிதாபப்பட்டனர்.
ஆனால் குரங்குக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. அப்போது அந்த வழியாக வந்த வெங்கடேஷ் என்பவர் தாய்க்குரங்கை மீட்டு பால் வாங்கி ஊற்றி அதன் பின்னர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். தாய் குரங்கு காயம் அடைந்தது முதல் சிகிச்சை பெறுவது வரை குட்டி குரங்கு அதன் அருகிலேயே கண்ணீர் சிந்திய படி வேதனையுடன் இருந்தது.
குட்டி குரங்கின் பாசத்தை கண்டு அனைவரும் வியந்து போயினர். சிகிச்சை பெற்று வரும் தாய்குரங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை டாக்டர் தெரிவித்துள்ளார்.