யாழ்.பல்கலையில் 19 மாதங்களாக பணியாற்றாது 13 மில்லியன் ரூபாய் சம்பளம் பெற்றுள்ள விரிவுரையாளர்!!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தாவரவியல் துறை முன்னாள் தலைவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் எந்தவொரு பாடநெறிக்கும் விரிவுரைகளை மேற்கொள்ளாத போதிலும் துறைத்தலைவரின் அறிவுறுத்தலை மீறி 19 மாதங்களாக அவருக்கான கொடுப்பனவாக 13 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை வெளிப்படுத்தியமையால் தான் பழிவாங்கப்பட்டு வருவதாக துறைத்தலைவர் பேராசியர் கபிலன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி , பிரதமர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு , உள்ளக கணக்காய்வு திணைக்களம் மற்றும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு திணைக்களம் என்பவற்றிலும் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் சாராம்சமானது,
குறித்த விரிவுரையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சுகவீன விடுமுறையை தனது சுய விருப்பின் பேரில் எடுத்திருந்தார். பின்னர் எந்தவிதமான ஆட்சேர்ப்பு நடைமுறையையும் பின் பற்றாது , மருத்துவ பரிசோதனைக்கு கூட உட்படுத்தாது , ஒழுங்கு முறைகளை மீறி இரு ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஏழாட்டை விடுமுறை (சபாட்டிக்கல் லீவு) வழங்கப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் 19 மாதங்களாக எந்த வேலையும் செய்யாத போதிலும் , சம்பளம் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவு என்பன துணைவேந்தரால் வழங்கப்பட்டு வருகிறது.
இவை தொடர்பில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு முறையிட்டமையால் , கடந்த மாதம் 27ஆம் திகதி “தொடர்பாடல் நெறிமுறை மீறல்” என குற்றம் சாட்டி துறைத்தலைவர் பதவியில் இருந்து என்னை பணிநீக்கம் செய்துள்ளார்.
எந்த குற்றமாக இருந்தாலும் , குற்றப்பத்திரிகை வழங்கி விளக்கம் கேட்டு , அது திருப்தி இல்லை எனில் விசாரணை நடாத்தி அதில் குற்றவாளியாக கண்டாலே பதிவு நீக்கம் செய்ய முடியும். ஆனால் அவை எதுவும் இன்றி பதிவு நீக்கம் செய்துள்ளனர்.
வேலை செய்யாதவருக்கு , சட்டரீதியற்ற முறையில் 13 மில்லியன் கொடுப்பனவு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் , நீதிவரைமுறைக்கு உட்படாது என்னை முறையற்ற ரீதியில் பழிவாங்கும் முகமாக பதவி நீக்கம் செய்துள்ளனர். என மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றம் நிரூபணமானால் சொந்த நிதியில் பணத்தை செலுத்துவேன் – துணைவேந்தர்.
பெண் விரிவுரையாளருக்கு கொடுப்பனவு வழங்கியமை முறையற்றது நான் தவறு இழைத்ததாக நிரூபணமானால் , அந்த அப்பணத்தினை எனது சொந்த பணத்தில் இருந்து மீளளிக்க நான் தயாராகவே உள்ளேன் என யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில் ,
குறித்த பெண் விரிவுரையாளர் பதவி துறந்ததன் பின்னர் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டமை 2018ஆம் ஆண்டு துணைவேந்தராக இருந்தவர் மற்றும் அந்த கால பகுதியில் இருந்த பேரவையை சார்ந்த விடயம்.
எனினும் தற்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அது தவறு என இந்த பேரவை கண்டறிந்தால் , அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆளொருவர் பல்கலை கழக சட்டத்திற்கு புறம்பாக தொடர்பாடலை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். தாவரவியல் துறை தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் நீக்கப்பட்டமை எனது (துணைவேந்தர்) தனிப்பட்ட முடிவல்ல. பேரவையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த முடிவு. பல்கலைக்கழக துறைத்தலைவரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் பேரவைக்கு உண்டு என தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டம்
தாவரவியல் பெண் விரிவுரையாளரின் கற்பித்தல் நடவடிக்கை ஒழுங்கில்லை என குற்றம் சாட்டி குறித்த விரிவுரையாளரை மாற்ற கோரி மாணவர்கள் சிலர் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை விஞ்ஞான பீட பீடாதிபதி மிரட்டுவதாக மாணவர் ஒன்றியத்தினால் துணைவேந்தருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் தனது தலைவர் பதவியை துஸ்பிரயோகம் செய்து , மாணவர்கள் கட்டாயத்திற்கு உட்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்தி வருவதாக விஞ்ஞான பீட பீடாதிபதி துணைவேந்தரிடம் பரஸ்பர முறைப்பாடு அளித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”