ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்பு..!!
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜஸ்சா படா கிராமத்தை சேர்ந்த அங்கிதா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் விடப்பட்டு இருந்த நிலையில், அந்த பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. சுமார் 60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டது. குழந்தை ஆள்துளை கிணற்றில் விழுந்தது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. தொடர்ந்து ஆள்துளை கிணற்றைச் சுற்றிலும் பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. குழாய் வழியாக குழந்தைக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டதோடு, கேமரா மூலம் குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தை அங்கிதா தற்போது நலமாக உள்ளதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தவுசா மாவட்ட கலெக்டர் கம்மர் உல்சமான் சவுத்ரி தெரிவித்துள்ளார்.