சர்வதேச சமூகமே நேரத்தை வீணடிக்காதீர்: தமிழர் தரப்பு!!
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். சர்வதேச தரப்பு இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள், உறவுகள் குறித்து அவர்கள் இன்னமும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் தமக்கான நாட்களை எண்ணிக்கொண்டுள்ள பெற்றோருக்கு செய்யக்கூடியது இதுவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் 140க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் இழந்துள்ளோம், இவர்களது உறவினர்கள் இறக்க முன்னர் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் சர்வதேச சமூகத்தை நாடுகிறோம், உண்மைகளை கண்டறிய உள்ளக பொறிமுறை உருவாக்கப்படும் என கூறி பல வருடங்கள் கடந்தும், கலப்பு நீதிமன்றங்களை கூட அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர் பிரதேசங்களின் சனப்பரம்பலை அழிக்கும் விதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. மறுபுறம் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகள் இன்றுவரை தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் ‘ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்டப் பாதுகாப்பின் தோல்வி’ என்ற தலைப்பில் ஜெனிவாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.