வெலே சுதாவுக்கு எதிரான வழக்கில் திகதி நிர்ணயம்!!
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார உட்பட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக டிசெம்பர் 5ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, நேற்று (15) நிர்ணயித்தார்.
170 மில்லியன் ரூபாய் கறுப்புப் பணத்தை பணச்சலவை செய்ததாக வெலே சுதா, அவருடைய மனைவி, அவருடைய தங்கை ஆகியோருக்கு எதிராக பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், 57 குற்றச்சாட்டுகளை முன்வைத்து சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விஜயராம மாவத்தை, ராஜகிரிய, நெதிமால ஆகிய பகுதிகளில் சொகுசு வீடுகள் மற்றும் சொகுசு கார்கள், தங்கநகைகள் ஆகியவையே கறுப்புப் பணத்தில் வாங்கப்பட்டு, பணச்சலவை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நேற்றையதினம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வெலே சுதா, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவருடைய மனைவியும் ஆஜராகியிருந்தார்.
2008ஆம் ஆண்டு, கல்கிஸை பிரதேசத்தில் வைத்து, 7.05 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட வெலே சுதா, ஹெரோய்ன் விற்பனை செய்தமை மற்றும் வைத்திருந்த வழக்கில், குற்றவாளியான இனங்காணப்பட்டு மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது.