பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்த நர்சிங் மாணவி..!!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெடபயலு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 20). இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.
அவரது பெற்றோர் தங்களது மகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடினர். ஆனால் ராதிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகள் காணாமல் போனது குறித்து பெடபயலு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.
ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததால் போலீசார் மற்றும் என்.ஐ. ஏ அதிகாரிகள் ராதிகாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்த ராதிகா போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- எனக்கு 20 வயதானதால் நான் மேஜர். எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க முடியும். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண் உரிமையை காப்பாற்றவே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது சைதன்யா மகிளா சங்கத்தில் சேர்ந்தேன். அப்போது மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தம் எனக்கு பிடித்து போகவே அந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை. எனவே போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்னுடைய பெற்றோரை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.