தலைமை பதவி வேணாம், மரியாதை மட்டும் வேணும்… ராகுல் காந்தி மீது குஷ்பு தாக்கு..!!
அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலரும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து குஷ்பு கூறியதாவது:-
எங்கிருந்து ஆட்சி மலரும்? காங்கிரசில் இருக்கும் முக்கியமான தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். யாத்திரை போகும்பாது பார்த்தால், அவர் யாருடன் உட்கார்ந்து பேசுகிறார் என்பதை பார்த்தோம். பாத யாத்திரைக்கான மேப்பை எடுத்து பார்த்தால் தெரியும். சுற்றுப்பயண திட்டம் முட்டாள்தளமாக இருப்பதாக அவரது கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். ஏதோ அவர் வசதிக்காக செய்ததுபோல் தெரிகிறது.
எங்கெல்லாம் தேர்தல் வரப்போகிறது? எங்கெல்லாம் ஆட்சி இல்லை? அங்கெல்லாம் போக திட்டமிடவில்லை. 18 நாள் கேரளாவில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறீர்கள்? நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பேசுபவர்களுடன் உட்கார்ந்து பேசுகிறீர்கள்? ராகுல் காந்தியை பொருத்தவரை கட்சி பொறுப்பு எனக்கு வேண்டாம், தலைமைப் பதவியையும் ஏற்க மாட்டேன், ஆனால் எல்லோரும் தலைமை பதவிக்கான மரியாதையை மட்டும் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை எடுத்துவிட்டால்… காங்கிரசைப் பொருத்தவரை அவர் வயநாடு தொகுதியின் எம்.பி. மட்டும்தான். காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்துவிட்டது. வளர வாய்ப்பு இல்லை. ஜனநாயகப்படி நமக்கு நல்ல எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் காங்கிரசில் ராகுல் காந்தி தலைமையில் இருக்கும் வரை அத்தகைய எதிர்க்கட்சி வராது. இவ்வாறு குஷ்பு கூறினார்.